சிலாவத்துறை பஸ் நிலையம் மாற்றியமைக்கப்பட வேண்டும்
முசலிப் பிரதேசத்திற்கான பிரதான பஸ் நிலையமொன்று 2009 யுத்த முடிவில் 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் சிலாவத்துறையில் அமைக்கப்பட்டது.
எனினும் அந்த பஸ் நிலையம் எவ்வித அடிப்படைத் திட்டமுமின்றி மக்கள் பயன்படுத்த முடியாத ஓர் இடத்தில் அமையப் பெற்றுள்ளது. பஸ்கள் அங்கு வந்து செல்வதற்கான நடைமுறைச் சாத்தியமில்லை.
அந்த பஸ் நிலையம் வேளாண்மை காலங்களில் நெல் காயப்போடும் ஒரு அனுகூலமான பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும் அதேவேளை அதிக இரவு நேரங்களில் மாட்டுத் தொழுவமாகவும் போதைப்பொருள் பாவிக்கும் இடமாகவும் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கிறனர்.
மக்கள் அதிகம் கூடுகின்ற, நடமாடுகின்ற, வந்து செல்லக்கூடிய. இடத்திலேயே ஒரு பிரதேசத்திற்கான பஸ் நிலையம் அமையப்பெற வேண்டும்.
சிலாவத்துறை சந்தியைச் சூழவுள்ள வைத்தியசாலை, வங்கி உட்பட்ட பல்வேறு அரச அலுவலகங்கள், வர்த்தக நிலையங்களில் மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு பஸ் நிலையம் வந்து பஸ் மூலம் தமது கிராமத்துக்கு இலகுவாகச் செல்வதற்கான ஒரு பஸ் நிலையம் சிலாவத்துறைச் சந்தியிலேயே அமைக்கப்பட வேண்டும்.
(நானாட்டான் பஸ் நிலையம் ஒரு முன்மாதிரியாகும்)
இதற்குப் பொருத்தமான காணி சிலாவத்துறைச் சந்தியில் முன்னர் 'சீநோர்' நிலையம் அமைந்திருந்த இடத்தில் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் போது குறித்த காணியைத் தவிர்த்துவிட்டு எவ்வித பொருத்தமும் இல்லாத இடத்தில் சிலாவத்துறை பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
(இதுவொரு சமூகத்துக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகமாகும்)
வேப்பங்குளம், மறிச்சுக்கட்டி, அரிப்புத்துறை ஆகிய 3 பக்கங்களிலிருந்து சிலாவத்துறை சந்திக்கு வரும் மக்களும் முசலிப் பிரதேசத்திலிருந்து வெளி இடங்களுக்குச் செல்லும் பயணிகளும் ஓர் உருப்படியான பஸ் நிலையம் இல்லாமல் சிலாவத்துறை சந்தியில் அலைக்கழிந்து திரிகின்றனர்.
எனவே சிலாவத்துறைச் சந்தியில் அமைந்துள்ள சீநோர் காணியில் கடைத்தொகுதியுடன் கூடிய பிரதான பஸ் நிலையம் அமைக்கப்படுவதோடு தற்போது பயனற்றுக் கிடக்கும் பஸ் நிலையம் விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்தும் நிலையமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
எனவே தயவுசெய்து 'தேசிய மக்கள் சக்தி' (NPP) முக்கியஸ்தர்களும் முசலிப் பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் சமூகத்துக்கான இவ்வுயரிய பணியில் ஒன்றுபட்டு அதிக கவனம் செலுத்தி செயற்பட முன்வர வேண்டுமென அன்பாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எழுத்தாளர்:-Muhuseen Raisudeen
Comments
Post a Comment